செம்மணி மனித புதைகுழியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வு பணியின் நான்காம் நாள் பணிகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய அகழ்வு பணிகளின் போது மேலும், மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, செய்மதி படங்கள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வு பணிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அப்பகுதிகளை துப்புரவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அங்கு இதுவரை மீட்கப்பட்டதை விட பெருமளவு எச்சங்கள் இருக்கலாமென அஞ்சப்படுகிறது.
இன்று, எலும்புக்கூட்டுடன் நீலநிற பாடசாலைப்பை ஒன்றும் மீட்கப்பட்டது. அந்த எலும்புக்கூட்டில் பெண்களின் ஆடைகளை ஒத்த துணிகள் காணப்பட்டன. அத்துடன் கையில் காப்பும் காணப்பட்டது. அது ஒரு சிறுமியின் எச்சமாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
இதுவரை மீட்கப்பட்ட எச்சங்களில் ஆடைகள் காணப்படவில்லை. அவை ஒழுங்கற்றவிதமாக புதைக்கப்பட்டிருந்தன. சடலங்களை புதைக்கும் போது பின்பற்றப்படும் திசை ஒழுங்கும் பேணப்பட்டிருக்கவில்லை.
ஆனால், இன்று புத்தகப்பையுடன் மீட்கப்பட்ட- சிறுமியென சந்தேகிக்கப்படும்- எச்சத்தின் மீது கல்லொன்று காணப்பட்டது. சிறார்களை அடக்கம் செய்யும் போது, சடலத்தின் மீது கல் வைக்கும் வழக்கம் இருக்கிறது.
இந்த எலும்புக்கூடு குழப்பத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.
அதேவேளை மனித புதைகுழி காணப்படும் இடத்தில் உள்ள மண் மாதிரிகள் பரிசோதனைக்காக இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அகழ்வு பணிகளுக்கான செலவீன பாதீடாக 12 மில்லியன் வழங்கப்பட்ட போதிலும், அதற்கு அண்மித்த தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அகழ்வு பணிகள் மதியம் 1 மணியுடன் நிறைவு பெற்றதுடன், நாளைய தினம் திங்கட்கிழமை காலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.