இலங்கை தமிழ் அரசு கட்சிக்குள் நிலவும் சிறிதரன்- சுமந்திரன் குழு மோதலால், ஊர்காவற்துறை பிரதேசசபையின் தவிசாளர் தெரிவில், திருவுளச்சீட்டு முறைக்கு செல்லும் நிலைமை ஏற்படலாமென கருதப்படுகிறது.
தீவக பகுதிகளில் உள்ள வேலணை, நெடுந்தீவு, ஊர்காவற்துறை பிரதேசசபைகளில் இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் தெரிவான உறுப்பினர்கள், நேற்று அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியிருந்தனர்.
இதன்போது, ஈ.பி.டி.பி கட்சியுடன் கூட்டாக செயற்பட்டு ஆட்சியை பிடிக்க விரும்பவில்லையென உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் தீவக கிளை பிரமுகர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில், யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாக தெரிவு விவகாரத்தை கையாள்பவர், கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன். கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கே பல விடயங்கள், நடந்த பின்னரே தெரிய வருகிறது.
தீவகமும் யாழ் மாவட்டத்திற்குட்பட்ட பகுதி. அப்படியெனில்- தீவக கிளையினர் சந்திப்பதெனில் எம்.ஏ.சுமந்திரனையல்லவா சந்தித்திருக்க வேண்டும்.
விவகாரமே அங்குதானுள்ளது. தீவக கிளையினர்- சிறிதரன் அணியை சேர்ந்தவர்கள்.
இலங்கை தமிழரசு கட்சிக்குள் தற்போது சிறிதரன்- சுமந்திரன் மோதல் முற்றியுள்ளது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான்.
ஊர்காவற்துறை பிரதேசசபையில் ஈ.பி.டி.பிக்கு 4 ஆசனங்கள். தமிழ் தேசிய பேரவைக்கு 3 ஆசனங்கள். இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு 2, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு 1 ஆசனம். தேசிய மக்கள் சக்திக்கு 3.
ஈ.பி.டி.பி அதிக ஆசனங்களை கொண்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் மற்றைய பகுதிகளில் தமிழரசுக்கட்சியுடன் கூட்டணியாக செயற்படுகிறது. ஊர்காவற்துறையிலும் ஆட்சியமைக்க முயலலாம். ஆனால், தற்போதைய அரசியல் சூழலில் எந்த சபையிலும் அதிகாரத்தை பெறுவதில்லையென ஈ.பி.டி.பி முடிவு செய்துள்ளதால், பிறிதொரு தரப்புக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளது.
இந்த பின்னணியில், தமிழ் தேசிய பேரவை ஆட்சியமைக்க, இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் இருவரும் ஆதரவளிப்பார்கள் என, உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம், சிறிதரன் கூறியிருந்தார்.
தமிழ் தேசிய பேரவையின் 3, தமிழரசின் 2, சங்கின் 1 என 6 உறுப்பினர்களின் ஆதரவுடன் தமிழ் தேசிய பேரவை ஆட்சியமைக்க வாய்ப்பிருந்தது.
தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக, இலங்கை தமிழரசு கட்சியின் தீவக கிளை பிரமுகர் ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
அவர் தெரிவித்தவை வருமாறு-
“எமது இரண்டு உறுப்பினர்களும் தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவளிப்பார்கள் என்றுதான் முடிவு செய்திருந்தோம். ஆனால் ஓரிரு நாட்களின் முன்னர் அதில் ஒரு உறுப்பினர் முடிவை மாற்றிவிட்டார். அவருடன் பேசினோம். அவர் எம்மிடம் கூறுகிறார்- எம்.ஏ.சுமந்திரன் தன்னிடம் பேசியதாகவும், தவிசாளர் பதவியை தருவதாக வாக்குறுதியளித்ததாகவும், ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் தவிசாளராகலாமென்றும், தான் தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினருக்கு வாக்களிக்க மாட்டேன் என்றும் எம்மிடம் கூறினார். தற்போதைய நிலைமையில்- எமது ஒரு உறுப்பினரும், தமிழ் தேசிய பேரவையின் 3 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஒரு உறுப்பினருமாக 5 உறுப்பினர்கள் ஒரு பக்கமாகவும், தமிழரசின் ஒரு உறுப்பினரும், ஈ.பி.டி.பியின் 4 உறுப்பினர்களுமாக மற்றொரு 5 உறுப்பினர்கள் மற்றைய பக்கத்திலும் நிற்கிறார்கள். தேசிய மக்கள் சக்தி நடுநிலை வகிப்பதால், அனேகமாக திருவுளச்சீட்டு முறைக்கும் செல்ல வாய்ப்புள்ளது. தமிழரசு கட்சியின் குழம்பிய உறுப்பினருடன் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர் முடிவை மாற்றினால், நிலைமை சுமுகமாகும்“ என்றார்.