தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, உள்ளூராட்சி மன்றங்களில் கூட்டாக ஆட்சியமைக்கும் ரெலோவின் யோசனையை இலங்கை தமிழ் அரசு கட்சி நிராகரித்துள்ளது.
இதன்மூலம், உள்ளூராட்சிசபைகளில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு இடையே இணக்கப்பாட்டை உருவாக்க முயன்ற கடைசி வாய்ப்பும் இல்லாமல் போயுள்ளது.
இந்த முயற்சியை இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஏற்றுக்கொண்ட போதும், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் நிராகரித்துள்ளார். தமிழரசு கட்சி தனித்தே யாழில் அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்கும் என பகிரங்கமாக அறிவித்த பின், அந்த நிலைப்பாட்டை மாற்ற முடியாது என்று விளக்கம் கூறியதாக அறிய முடிகிறது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்தின் இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று (9) நடந்தது. எம்.ஏ.சுமந்திரனும் இதில் கலந்து கொண்டார். ரெலோ தரப்பில் செல்வம் அடைக்கலநாதனும், சுரேன் குருசாமியும் கலந்து கொண்டனர்.
சந்திப்பின் தொடக்கத்திலேயே இலங்கை தமிழ் அரசு கட்சியின் விட்டுக்கொடுக்காத போக்கினால் உள்ளூராட்சிசபைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை ரெலோ தரப்பு சுட்டிக்காட்டியது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணக்கத்தை ஏற்படுத்தி- சுமுகமாக- அதிக சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பிருந்த போதும், தமிழரசு கட்சி அதை செய்யாமல்- தற்போது வேறு தரப்புக்களுக்கு பல சபைகளை வழங்குவதுடன், ஈ.பி.டி.பி கூட்டணி விமர்சனங்களையும் சந்திப்பதை ரெலோ தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தலாம் என்றுதானே தாம் கூறியிருந்தோம் என சுமந்திரன் குறிப்பிட்டார்.
ஆயினும், இணக்கப்பாட்டை ஏற்படுத்தலாம் என்று மட்டுமே கூறிக்கொண்டு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இரகசியமாக கூட்டு வைக்க முயன்றதை ரெலோ தரப்பு சுட்டிக்காட்டியது. அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் கூட்டு வைப்பதற்கு முதல் நிமிடம் வரை தமிழரசு கட்சியுடன் பேசி- நிலவரத்தை கூறியதையும்- ஒரு சபையையேனும் வழங்க முடியாது என தமிழரசு கட்சியினர் கூறியதையும் ரெலோ தரப்பினர் நினைவூட்டினர்.
நீங்கள் வேறு கூட்டணி அமைத்ததால் தான் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியாமல் போனது, நீங்கள் வேறு கூட்டணி அமைத்ததால் உங்களுடன் சபைகளை பங்கிட எமது உறுப்பினர்கள் விரும்பவில்லையென சுமந்திரன் குறிப்பிட்டார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனான கூட்டு அமைவதற்கு முன்னர், சுமந்திரனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதை சுரேன் நினைவூட்டினார். அந்த பேச்சில், ஒரு பிரதி தவிசாளரையேனும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு வழங்க முடியாது என சுமந்திரன் குறிப்பிட்டதை நினைவூட்டிய சுரேன், தவிசாளர் பதவியை வழங்க விரும்பாதது நீங்களா அல்லது உங்கள் உறுப்பினர்களா என கேட்டார்.
அத்துடன், “உங்கள் வீட்டுக்கு தண்ணீர் கேட்டு வருபவருக்கு தண்ணீரை கொடுக்க மறுத்து விட்டு, அவர் பக்கத்து வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்த பின்னர், பக்கத்து வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்ததால்தான் நான் தண்ணீர் தரவில்லையென கூற முடியுமா? உங்கள் பேச்சு அப்படியல்லவா இருக்கிறது?“ என வினவியதாக ரெலோ தரப்பினர் குறிப்பிட்டனர்.
“தற்போதும், நிலைமை கெட்டுப் போய்விடவில்லை. தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன இணைந்து ஆட்சியமைக்கலாம். உதாரணமாக- யாழ் மாநகரசபையில் முதலிரு வருடங்களும் தமிழ் அரசு கட்சியும், அடுத்த இரு வருடமும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உப தவிசாளர் என பகிர்ந்து கொள்ளலாம். நீங்கள் சம்மதித்தால், தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் நாம் பேச்சு நடத்துகிறோம்“ என ரெலோ தரப்பு குறிப்பிட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், தம்முடன் இணக்கத்தை ஏற்படுத்துகிறார்கள் இல்லை. அண்மையில் அவர்களை சந்தித்து பேச்சு நடத்திய போதும், தமக்குள் இணக்கப்பாடு ஏற்பட்டது என வெளியில் சொல்ல வேண்டாம் என்றார்கள் என சீ.வீ.கே.சிவஞானம் குறைபட்டுக் கொண்டார்.
தமிழ் அரசு கட்சியும், முன்னணியும் ஏன் இணக்கத்தை ஏற்படுத்த முடியாது. இரு கட்சிகளின் கொள்கையும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஒரு காலத்தில் துரோகிகள் என தம்மை பகிரங்கமாக திட்டிய முன்னணி, தற்போது கூட்டணி வைத்துள்ளதால், நீங்களும் முறையாக பேச்சு நடத்தினால் இணக்கத்தை ஏற்படுத்தலாம் என ரெலோ தரப்பில் குறிப்பிடப்பட்டது.
யார் யார் தவிசாளர்கள் என அறிவித்து விட்டதால் இதில் சிக்கல் உள்ளதாக தமிழரசு கட்சி தரப்பில் கூறப்பட்டது.
இதில் சிகக்ல் எதுவும் இல்லை. அப்படி அறிவிக்கப்பட்டவர்களையே தவிசாளர்களாக கொண்டு, காலத்தை பகிரலாம் என ரெலோ தரப்பில் கூறப்பட்டது.
அப்படியானால் இதைப்பற்றி தொடர்ந்து பேசுங்கள். ஆனால் வலி கிழக்கு மட்டும் விதிவிலக்கு. அது எமக்கு தேவை. ஏனெனில் கடந்த 2 உள்ளூராட்சி ஆட்சிக்காலத்தில் அங்கு தமிழரசு ஆட்சி இருக்கவில்லையென சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்ட சுமந்திரன், இல்லை. இந்த பேச்சை தொடர முடியாது. ஏனெனில், இன்று (நேற்று) யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில், இலங்கை தமிழரசு கட்சியே யாழில் அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்கும் என பகிரங்கமாக அறிவித்து விட்டேன். அந்த அறிவிப்பை மாற்ற முடியாது என தெரிவித்ததாக சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
“சுமந்திரன் அது உங்களது அறிவிப்புத்தானே. ஒரு இனமே விடுத்த அறிவிப்பில்லைத்தானே. இப்படித்தான் யுத்த காலங்களில் இயக்கங்கள் பல முறை அரசுடன் பேச்சில்லை என அறிவித்தன. பின்னர் பேசின. இயக்கங்களுடன் பேச்சில்லை என அரசாங்கம் பல முறை அறிவித்தது. சில முகாம்களை அடிக்க, அவர்கள் பேச்சுக்கு வந்தார்கள். நீங்கள் ஒருவர் விடுத்த அறிவிப்பை மாற்ற முடியாது என்கிறீர்களே“ என குறிப்பிட்டதாக ரெலோ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதன் பின்னர் சுமந்திரன் சற்று சூடாகி, யாழ்ப்பாணத்தில் ரெலோ- ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எப்படி நடந்து கொள்கிறதோ, அதேவிதத்திலேயே தமிழரசு கட்சி வன்னியில் நடந்து கொள்ளும் என குறிப்பிட்டுள்ளார்.
வன்னியில் நாம் இழப்பதென்றால் ஒரு சபைதான். ஆனால் எமது ஆதரவில்லாவிட்டால் நீங்கள் பல சபைகளை வன்னியில் இழப்பீர்கள் என்பதை ரெலோ தரப்பினர் சுட்டிக்காட்டியதுடன், உள்ளூராட்சிசபைகளை கைப்பற்றி விட்டதாக இறுமாந்திருக்காதீர்கள், இந்த பங்கீட்டு இழுபறியால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர், மாகாணசபை தேர்தலில் இதன் அறுவடையை தமிழ் கட்சிகள் அனைவரும் சந்திப்போம், தேசிய மக்கள் சக்தி அதிக பலனடையும், இதற்கான பெரும் பொறுப்பு தமிழரசு கட்சியையே சாரும் என குறிப்பிட்டுவிட்டு, கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.