டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள்!

Date:

மிதுனன் பிருந்தா (23)
முள்ளியவளை கிழக்கு

எனக்கு சில நாட்களின் முன்னர்தான் திருமணம் நடந்தது. உயர்கல்வி கற்று வருகிறேன். சில வருடங்களிற்கு குழந்தைப் பேற்றை தள்ளிவைக்க விரும்புகிறேன். கருத்தடைக்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளன? எது நம்பகரமானது? நான் எந்த முறையை பின்பற்றலாம்?

டாக்டர் ஞானப்பழம்-

பிருந்தா. கருத்தடை வழிமுறைகள் என்னென்ன என்பதைதான் நாம் சொல்லலாம். எது வசதியானது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். பொருத்தமான மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற்று, ஒரு முடிவுக்கு வாருங்கள்.

கருத்தடை வழிமுறைகளை மட்டும் சொல்கிறோம்.

1. மாத்திரை

கருத்தடை மாத்திரையானது முட்டை வெளிப்படுதலை (ஓவரேஷன்) தடுக்கிறது. இந்த மாத்திரையில், பெண்ணின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் ஹார்மோன்கள் ரசாயன வடிவில் இருக்கின்றன. இந்த ஹார்மோன்கள்தான் இயற்கையான மாதசுழற்சி மற்றும் முட்டை வெளிப்படுதல் நிகழவும், மாதவிலக்கு ஏற்படவும் காரணமாக இருக்கின்றன. இந்த ஹார்மோன்களைச் செயற்கையாக அளிப்பதன் மூலம், அது உடலில் செயல்பட்டு, முட்டை வெளிப்படுதலைத் தடுக்கிறது. இதன் மூலம் கரு உருவாவது தடுக்கப்படுகிறது. இந்த மாத்திரை மிகவும் ஆற்றல்கொண்டது. குழந்தைப்பேறு எப்போது வேண்டும் என்று முடிவு செய்கிறார்களோ, அப்போது இந்த மாத்திரை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

2. ஐ.யு.டி

இன்ட்ராயூட்ரைன் டிவைஸ் (Intrauterine device) என்பது காப்பர் டி, லூப் போன்றவை ஆகும். இவை, பிளாஸ்டிக் அல்லது உலோகத்தால் ஆன மிகச்சிறிய, எளிய கருவி. இவை கர்ப்பப்பையின் உள்ளே வைக்கப்படும். இதை டாக்டர்தான் பொருத்துவார். இது பல்வேறு அளவுகளில், அமைப்புகளில் வருகிறது. கருத்தரித்த முட்டையானது எண்டோமெட்ரியத்தை அடையவிடாமல் தடுத்து, கர்ப்பம் அடைவதைத் தடுக்கிறது. இதை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

3. ஸ்பெர்மிசைட்ஸ்

இது ரசாயனப் பொருள். இது விந்தணுக்களை அழிக்கும் அல்லது நுரை போன்ற அமைப்பை உருவாக்கி விந்தணு ஓட்டத்தைத் தடை செய்யும். இது, பெண்ணின் பிறப்புறுப்பில் வைக்கக்கூடிய ஜெல், கிரீம், மாத்திரை எனப் பல வடிவங்களில் வருகிறது. இது, 100 சதவிகிதம் துல்லியமானது என்று சொல்ல முடியாது. டயாப்ரம் அல்லது கேப் உடன் பயன்படுத்தும்போது நல்ல பயன் அளிக்கும்.

4. டயாப்ரம் (Diaphragm)

கூடாரம் போன்ற முகப்பு கொண்ட ரப்பரால் ஆன பொருள். இதில், வளைந்துகொடுக்கக்கூடிய கரை இருக்கிறது. இதை உடலுறவு கொள்வதற்கு முன்பு பெண்கள் பொருத்திக்கொள்ள வேண்டும். வெஜைனாவுக்குப் பின்புறம், பியூபிக் எலும்பு பகுதியில் பொருத்த வேண்டும். மிகச்சரியாகப் பொருத்தினால் கர்ப்பப்பைவாய் திறக்காமல் போய்விடும். இதனால், கர்ப்பப்பைக்குள் விந்தணு செல்வது தடுக்கப்படும். உடலுறவுக்குப் பின் ஆறு மணி நேரத்தில் இதை அகற்றிவிட வேண்டும். தொடக்கத்தில் இந்த டையாப்ரத்தை மருத்துவர்தான் பொருத்துவார். நன்கு பழகிய பிறகு இதைப் பெண்கள் தாங்களாகவே பொருத்திக்கொள்ளலாம். இதைத் தனியாகப் பயன்படுத்துவதால், பெரிய பலன் இருக்காது. ஸ்பெர்மிசைட்ஸ் உடன் பயன்படுத்தும்போது பலன் கிடைக்கும்.

5. கேப்

இதுவும் ரப்பரால் ஆன பொருள். இதுவும் கர்ப்பப்பைவாய்க்கும் வெஜைனாவுக்கும் இடையில் பொருத்தப்பட வேண்டியது. இது, விந்தணுக்கள் பயணிப்பதைத் தடுக்கிறது. கிட்டத்தட்ட இதுவும் டயாப்ரம் போலத்தான். ஆனால், பல்வேறு அளவுகளில் வருகிறது.

6. ஆணுறை

கருத்தரிப்பைத் தடுக்க அதிக அளவில் பயன்படுத்தப்படும் முறை ஆணுறை. இது மிக மெல்லிய ரப்பர் அல்லது ஃபிரெஞ்சு லெதரால் ஆனது. இதன் முனையில் சிறிய அளவு வெற்றிடம் இருக்கும். உடலுறவின்போது, விந்தணு இந்த இடத்தில் விழும். ரப்பரால் ஆனது என்பதால், இதைத் தாண்டி விந்தணுவால் பெண்ணின் பிறப்புறுப்புக்குள் நுழைய முடியாது. மேலும், பால்வினை நோய்கள் பரவாமல் தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஆணுறையைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதில் துளை ஏதும் உள்ளதா என்பதுதான். துளை இருந்தால், விந்தணுக் கசிவு ஏற்படலாம்.

7. வெளியே எடுத்தல் (Withdrawal method)

உடலுறவின்போது, விந்தணு வெளிப்படும் நேரத்தில், ஆணுறுப்பை வெளியே எடுத்துவிடும் முறை இது. இதுவும் நம்பிக்கைக்குரிய முறையாக இல்லை. ஏனெனில், உடலுறவுக்கு முன்பு தம்பதி ஈடுபடும் முன் விளையாட்டுகளின் (ஃபோர் பிளே) போது, ஆணின் பிறப்புறுப்பில் இருந்து வெளிப்படும் திரவத்தில்கூட விந்தணுக்கள் இருக்கலாம். மேலும், விந்தணு வெளிப்படும் நேரத்தில் ஆணின் பிறப்புறுப்பை வெளியே எடுப்பது சிலருக்கு அசெளகரியத்தைக் கொடுக்கலாம்.

8 ரிதம் வழிமுறை

சேஃப் பீரியட்ஸ் மெத்தட் அல்லது இயற்கைக் குடும்பக் கட்டுப்பாடு என்று இதைச் சொல்வார்கள். மாதவிலக்கின் சுழற்சியை அடிப்படையாகக்கொண்டது. இதில், குழந்தைப் பிறப்புக்கு வாய்ப்பு இல்லாத நாட்களில் உடலுறவுகொள்வது பரிந்துரைக்கப்படுகிறது. அதாவது, முட்டை வெளிப்படும் காலக்கட்டத்தில் உடலுறவு கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக, இயல்புநிலை மாதசுழற்சி உள்ளவர்களுக்கு முட்டையானது, மாதவிலக்கு வந்ததில் இருந்து தோராயமாக 14-வது நாள் வெளிப்படும். பெரும்பாலான பெண்களுக்கு இயல்பான அளவான 28 நாள் மாத சுழற்சி இருப்பது இல்லை என்பதுதான், இதன் மிகப்பெரிய பின்னடைவு.

9. அவசரகால கருத்தடுப்பு மாத்திரை

எதிர்பாராத சூழலில், பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு நடந்துவிட்டது என்றால், அந்தப் பெண் மிக அதிக ஆற்றல்கொண்ட சின்தடிக் ஈஸ்ட்ரோஜன் மாத்திரையை 72 மணி நேரத்துக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்த டோஸ் மருந்தை அடுத்த 12 மணி நேரம் கழித்து எடுத்துக்கொள்ள வேண்டும். கரு, ஃபெலோபியன் குழாய் வழியே பயணிப்பதை இந்த மாத்திரை தடுக்கும் அல்லது எண்டோமெட்ரியத்தில் ஒட்டிக்கொண்டு வளர்வதைத் தடுக்கும். வாந்தி, குமட்டல் போன்ற சில பக்கவிளைவுகளும் இதில் உள்ளன.

10. அறுவைசிகிச்சை

எதிர்காலத்தில் குழந்தைப்பேறு வேண்டாம் என்பவர்களுக்கு செய்யப்படுகிறது. இதனால், தாம்பத்திய வாழ்வில் எந்தப் பாதிப்பும் வராது. கர்ப்பமாகிவிடுமோ என்ற பயமின்றி தாம்பத்திய உறவுகொள்ள அறுவைசிகிச்சை பெரிதும் உதவியாக இருக்கிறது. பெண்களுக்குச் செய்யப்படும் அறுவைசிகிச்சைக்கு டியுபெக்டமி என்று பெயர். இதில், அறுவைசிகிச்சை மூலம் ஃபெலோபியன் குழாய் கத்தரிக்கப்பட்டு முடிச்சு போடப்படும். இதன்மூலம், விந்தணுக்கள் முட்டையை அடைவது தடுக்கப்படுகிறது. முன்பு, வயிற்றில் அறுவைசிகிச்சை செய்துவந்தனர். தற்போது, லேப்ராஸ்கோப்பி மூலம் செய்துவிடுகின்றனர்.

ஆண்களுக்குச் செய்யப்படும் சிகிச்சைக்கு வாசக்டமி என்று பெயர். இதில், டெஸ்டிஸில் (விதை) இருந்து ஆண் பிறப்பு உறுப்பு நோக்கி வரும் விந்துக் குழாய் கத்தரித்து முடிச்சுப் போடப்படும். இதனால், தாம்பத்திய உறவில் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. வழக்கம்போல, விந்து திரவத்தை வெளியிடலாம். அந்த திரவத்தில் விந்து அணுக்கள் மட்டும் இருக்காது. புறநோயாளியாக வந்தே அறுவைசிகிச்சை முடித்து வீடு திரும்பலாம்.

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

Казино Официальный Сайт Играть в Онлайн Казино Pin Up.8526

Пин Ап Казино Официальный Сайт - Играть в Онлайн...

Онлайн Казино Официальный Сайт в России и странах СНГ.3631

Пин Ап Онлайн Казино Официальный Сайт в России и...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்